3-வது நபர் உத்தரவாதமும் தேவையில்லை:
மாணவர்களுக்கு ஜாமீன் இல்லாமல் ரூ.7 1/2 லட்சம் வரை கல்விக்கடன்
மத்திய அரசின் புதிய திட்டம் இந்த ஆண்டில் இருந்து அமல்
சென்னை, மே.31-
மாணவர்களுக்கு ஜாமீன் இல்லாமல், 3-வது நபர் உத்தரவாதம் இல்லாமல் ரூ.7 1/2 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.
கல்விக்கடன் திட்டம்
படிப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் கல்விக்கடன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம், என்ஜினீயரிங், மருத்துவம், நிர்வாகம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அரசு வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம்.
படிக்கும்போது கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி வந்தால் போதும். வட்டியும் குறைவுதான். வங்கிகளுக்கு ஏற்ப 10 சதவீதம், 11 சதவீதம் என்ற அளவில் வட்டி உள்ளது. மாணவிகளுக்கு அரை சதவீதம் வட்டி குறைவு. கடனை, படித்து முடித்து ஓராண்டு கழித்து அல்லது வேலை கிடைத்தவுடன் செலுத்த வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
தற்போது, படிக்கும் காலத்தில் வட்டியையும் கட்ட வேண்டாம். படித்து முடித்ததும் அசல் மற்றும் வட்டியை சேர்த்து கட்ட வேண்டும். உள்நாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சமும் கல்விக்கடன் கொடுக்கிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை தொடர்வதற்கு கல்விக்கடன் திட்டம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
எனினும் நடைமுறையில் மாணவர்கள் அவ்வளவு எளிதில் கடன் வாங்கி விட முடிவதில்லை. ரூ.4 லட்சம் வரையுள்ள கடனுக்கு ஜாமீனோ அல்லது 3-வது நபர் உத்தரவாதமோ கேட்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், வங்கி மேலாளர்கள் எவ்வளவு கல்விக்கடன் என்றாலும் பாதுகாப்பு வசதிக்காக ஜாமீன் அல்லது உத்தரவாதம் கேட்கத்தான் செய்கிறார்கள்.
ரூ.7 1/2 லட்சம் வரை ஜாமீன் தேவையில்லை
இந்த நிலையில், ஏற்கனவே, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டு முதல் மாணவ-மாணவிகளுக்கு ஜாமீன் இல்லாமல், 3-வது நபர் உத்தரவாதம் இன்றி ரூ.7 1/2 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நல்ல மதிப்பெண் பெற்று புகழ்பெற்ற கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.71/2 லட்சம் கடன் வரம்புக்கு மேலும் இந்த சலுகையை வழங்கலாம் என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த சிறப்பு திட்டத்திற்காக தேசிய கல்வி நிதிக்கழகம் என்ற புதிய நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கி அதற்கு கணிசமான நிதி உதவி செய்யும். கல்விக்கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள கடன்தொகையை தேசிய கல்வி நிதிக்கழகம் மூலமாக ஈடுசெய்யப்படும். இதன் காரணமாக, அரசு வங்கிகள் ஜாமீன் இல்லாமல், 3-வது நபர் உத்தரவாதம் இன்றி தைரியமாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிட முடியும்.
ரூ.11,200 கோடி கடனுதவி
கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் 5 லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.11,200 கோடி அளவுக்கு கல்விக்கடன் வழங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் இன்றி, 3-வது நபர் உத்தரவாதம் இல்லாமல் ரூ.71/2 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கும் திட்டம் உன்னதமான திட்டம் என்றாலும் நடைமுறையில் அது எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பதை வைத்துத்தான் இந்த திட்டத்தின் வெற்றி அமைந்திருக்கும்.
Source : Daliythanthi 31st May 2012







