தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை தமிழக அரசு உத்தரவு
By karpi at January 21, 2012 | 5:21 am | Print
மருத்துவ தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம்:
தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை
தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஜன.21
தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் நர்சு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:&
முரண்பாடு
தற்போது அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் அரசு நர்சிங் பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவ நிறுவனங்களிலும் நர்சு பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகளிலும், நர்சிங் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ&மாணவிகளும் அரசு கல்லூரிகளைப் போன்று மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்தும்தேர்வுகளில் கலந்துகொண்டுதான் தேர்ச்சி பெறுகிறார்கள். இரண்டு பேருக்கும் இந்த இயக்குனரகமே தேர்ச்சிசான்றிதழை வழங்குகிறது.
ஆனால், அரசு வேலைவாய்ப்பு என்று வரும்போது தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு நர்சு வேலை வழங்கப்படுவது இல்லை. அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நர்சு பணி வழங்குவது போல தங்களுக்கும்அரசு பணி வழங்க வேண்டும் என்று தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் படித்த மாணவ&மாணவிகள் அரசுக்கு தொடர்ந்து வேண்டு கோள் விடுத்து வந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் வேலை
அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கும்போது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படாதது இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அரசு கருதுகிறது.
எனவே, வரும் காலத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களில் நர்சு காலி இடங்கள் வரும்போது அந்த இடங்களில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்து முடித்தவர்களைக்கொண்டும் நிரப்புவது என்று அரசு முடிவு செய்துள்ளது. இரு தரப்பினரும் புதிதாக அமைக்கப்பட உள்ள மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

