வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

By at January 9, 2012 | 5:53 pm | Print

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

காஞ்சிபுரம், ஜன. 8: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்கள் உதவித்தொகைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சுதர்சன் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 9-ம் வகுப்புத் தேர்ச்சிக்கு மேல் கல்வித்தகுதியுடன் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அலுவலகத்திலேயே முத்திரை இடப்பட்டு கொடுக்கப்படுகின்றன. எனவே வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, அனைத்துச் சான்றுகளுடன் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

உதவித்தொகைப் பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் வேலைவாய்ப்பு எதுவும் பாதிக்கப்படாது.

ஒவ்வொரு காலாண்டிலும் முதல் இரண்டு மாதங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி மார்ச் 31-ல் முடியும் காலாண்டுக்கு உதவித்தொகை கோரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 29-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அலுவலக முத்திரை இடப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் தொடர்ந்து உதவித்தொகைப் பெற வேண்டுமெனில் விண்ணப்பித்து ஓராண்டு முடிந்திருப்பின் இரண்டாம் ஆண்டின் தொடக்கத்திலும், இரண்டாண்டுகள் முடிந்திருப்பின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தான் எந்த ஒரு நிரந்தரப் பணியிலும் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணம் அளித்தல் வேண்டும்.

அத்துடன் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்கம், வரவு வைக்கப்பட்ட பக்கங்கள், விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு ஆகியவற்றின் நகல்களை இணைத்தல் வேண்டும்.

உரிய காலக் கெடுவுக்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறினால் உதவித் தொகை தொடர்ந்து வழங்குவது நிறுத்தப்படும்.

விண்ணப்பங்கள் இலவசம்: தமிழக அரசு அச்சடித்துள்ள விண்ணப்பப் படிவங்கள், வருவாய்த் துறை சான்றிதழுக்கான படிவங்கள் மற்றும் சுய உறுதிமொழி ஆவணப் படிவங்கள் யாவும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகுதி உடையவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

வெளியே விலைக்கு விற்கப்படும் படிவங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தகவல் : தினமணி சனவரி8,2012

 

உதவித்தொகை கல்வி

Related Posts

Post Your Comments